ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு, மீண்டும் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது. பிறந்தவுடன் தனது தாயால் கைவிடப்பட்ட இந்தக்குட்டி குரங்கு, ஒரு மென்மையான ‘ஒராங்குட்டான்’ பொம்மையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் தேடிய வீடியோ ஏற்கனவே பலரையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தது. ஆனால், இப்போது பஞ்ச் வாழ்க்கையில் ஒரு அழகான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘மோமோ-சான்’ என்ற பெண் குரங்குடன் பஞ்ச் காதல் வயப்பட்டுள்ள வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, விளையாடும் காட்சிகள் பார்ப்போரை “அடடே” என வியக்க வைத்துள்ளது.

​இந்த வீடியோவை @beyond_the_wildlife என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. பஞ்ச்சை விட மோமோ-சான் வயதில் சற்று பெரியவளாக இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். “பஞ்சுக்குக் காதலி கிடைத்துவிட்டது, ஆனால் நீங்கள் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறீர்கள்” என நெட்டிசன்கள் பலரும் தங்களைத்தாங்களே கிண்டல் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர். “பஞ்ச் இப்போது பிரபலமாகிவிட்டதால் தான் மோமோ-சான் அவரைத் தேடி வந்திருக்கிறார்” என வேடிக்கையாகப் பேசினாலும், தாயின் அன்பிற்காக ஏங்கிய ஒரு ஜீவனுக்கு இப்போது ஒரு அழகான துணை கிடைத்திருப்பதை உலகெங்கிலும் உள்ள விலங்கு பிரியர்கள் கொண்டாடி வருகின்றனர்.