பீகார் மாநிலம் கயா மாவட்டத்திலுள்ள மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்ற எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர், வழக்கம் போல இரவு தூங்கிவிட்டு காலை எழுந்து தனது மொபைல் போனைப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவருடைய ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் யாரும் எதிர்பாராத விதமாக ₹2,94,80,00,000 சுமார் 295 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்டத் தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வங்கி கணக்கைப் பயன்படுத்தி வரும் அவர், அதிகபட்சமாகவே 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்துள்ளார். இதனால் ஆரம்பத்தில் இது ஏதேனும் மோசடியா அல்லது கனவா என்று குழம்பிய விகாஸ், பலமுறை செயலியை மூடித் திறந்து சரிபார்த்தும் அந்த மாயாஜாலத் தொகை அப்படியே நீடித்தது.
இந்த செய்தி கிராமம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியதை அடுத்து, ஒரே இரவில் கோடீஸ்வரரான பிளம்பரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இது வங்கியின் தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், விகாஸ் குமார் எவ்வித அவசர முடிவும் எடுக்காமல் தனது கணக்கிலிருந்து பணப் பரிவர்த்தனைகள் எதையும் செய்யாமல் புத்திசாலித்தனமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வரும் வேளையில், வங்கியின் அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் வரை விகாஸ் குமார் நாட்டின் “மிகப் பெரிய பணக்கார பிளம்பராக” வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
