மும்பை ராம் மந்திர் ரயில் நிலையத்தில், ‘நண்பன்’ படத்தில் நடிகர் விஜய் மொபைல் போன் உதவியுடன் பிரசவம் பார்ப்பது போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிஜமாகவே அரங்கேறியுள்ளது. நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென ரயில் நிலைய நடைமேடையிலேயே பிரசவ வலி ஏற்பட, அங்கிருந்த ஒரு இளைஞர் எந்தவித மருத்துவ உதவியும் இன்றி துணிச்சலாக முன்வந்துள்ளார். ஒரு மருத்துவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு, அவர் கொடுத்த ஆலோசனையின்படி அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துள்ளார்.

​”இது ஒரு ஆண் குழந்தை” என்று அந்த இளைஞர் அறிவித்தவுடன், பதற்றத்தில் இருந்த கூட்டம் அப்படியே ஆரவாரமாக மாறி கைதட்டிப் பாராட்டியது. “என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை, முதலில் பயமாக இருந்தது” என்று அந்த இளைஞர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறினார். ஒரு அந்நிய பெண்ணுக்கு ஆபத்தான நேரத்தில் தேவதூதனாக வந்து உதவிய அந்த இளைஞரை, “நிஜமான ஹீரோ” என்று சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.