திமுக நிர்வாகி ரங்கநாதன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது, சீமான் சென்ற காரை திமுக நிர்வாகி ரங்கநாதன் வழிமறித்ததாக கூறப்படுகிறது. அப்போது சீமானை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரங்கநாதனை தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் எனக் கோரி சீமானின் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் காவல் நிலையத்தில் சீமான் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.