ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த காளிகுமார் (33) என்பவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சரமாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடல் அருப்புக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெண் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடு முயன்றதால் அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர்.

அந்த சமயத்தில் திடீரென போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தினர். அவருடைய தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். அதோடு காவலர் ஒருவர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.