விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பெண் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். அதோடு ஒரு காவலர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது போலீஸ் டிஎஸ்பியின் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மேலும் போலீஸ்காரர்கள் தங்கள் பணியில் இருக்கும் போதே தாக்கப்படும் அளவுக்கு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிய திமுக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

“>