
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா நகரில் உள்ள சவுபட்டி பகுதியிலுள்ள அடல் குஞ்ஜ் பகுதியில் ஒரு இளம்பெண்ணை ஒரு இளைஞர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் நிறைந்த தெருவில் அந்த இளைஞர், அந்தப் பெண்ணை கைகளால் சரமாரியாக அறைந்ததோடு, முடிகளை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கியதோடு அந்த பெண்ணின் செல்போனையும் கீழே போட்டு உடைத்தார்.
இந்த பயங்கரமான சம்பவத்தை பார்த்த சாலையோர நபர்கள் அதை தடுக்கவில்லை. அந்த பெண்ணுக்கு ஒருவர் கூட உதவி செய்ய வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இளைஞர் மற்றும் பெண் அந்த பகுதியில் இருந்து சென்று விட்டனர். அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த முழுக்காட்சியும் பதிவாகியுள்ளது.
இது காதல் தொடர்பான தகராறாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. எனினும் வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் விவரத்தையும் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சிவில் லைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கமலேஷ் சாஹூ தெரிவித்துள்ளார்.