வளைகுடா பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியில் சிக்காமல் இந்திய மாலுமி ஒருவர் தனது புத்திசாலித்தனத்தால் கப்பலை மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைபீரிய நாட்டு கொடியுடன் பயணம் செய்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ (Shenlong Suezmax) என்ற பிரம்மாண்ட கப்பல் இன்று காலை மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் மிகவும் ஆபத்தான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை கடந்தபோது, அங்கிருந்த ஈரானிய கடற்படையின் கண்ணில் படாமல் இருக்க, கப்பலில் இருந்த இந்திய மாலுமி அதிரடியான முடிவுகளை எடுத்தார்.

முதலில் கப்பலின் அனைத்து விளக்குகளையும் அணைத்து நடுக்கடலில் கப்பலை உருமறைப்பு செய்த அவர், கப்பலின் இருப்பிடத்தைக் காட்டும் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மற்றும் டிரான்ஸ்பாண்டர் எனப்படும் கம்பியில்லா தொடர்பு சாதனங்களையும் முழுமையாக முடக்கினார்.

இதனால் ஈரானின் ரேடார் மற்றும் கண்காணிப்பு கருவிகளில் சிக்காமல் அந்தக் கப்பல் ரகசியமாக அந்தப் பகுதியை கடந்தது. ஆபத்தான எல்லையைத் தாண்டிய பின்னரே மீண்டும் கப்பலில் விளக்குகள் எரியவிடப்பட்டன.

இந்திய மாலுமியின் இந்தச் சமயோசித செயலால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கப்பலும், அதில் இருந்த ஊழியர்களும் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்துள்ளனர்.