காந்திய மக்கள் இயக்கம் என்ற அமைப்பை கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழருவி மணியன், அதனை 2022-ஆம் ஆண்டு ‘காமராஜர் மக்கள் கட்சி’ என பெயர் மாற்றினார். இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியுடன் இணைத்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்தார்.
ரஜினிகாந்துடன் கடந்த 3 ஆண்டுகளாக மாற்று அரசியல் குறித்து பேசியதில், “ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. 3 ஆண்டுகளில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது” என விமர்சித்தார்.
மேலும், “கணிசமான வாக்கு வலிமை கொண்ட நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாட்டை தீவிரமாக சிந்திக்க வேண்டும். வெறும் 20 சதவீத வாக்குகளை வைத்து முதலமைச்சராக முடியாது. பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் 41 சதவீத வாக்குகளுடன் விஜயும் இணைந்தால், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்” என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நமது ஒரே நோக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, நடிகர் விஜய் முதலமைச்சர் கனவை தியாகம் செய்துவிட்டு தமாகா தலைமையிலான அணிக்கு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
