கர்நாடக மாநிலம்  கடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்குண்டா (39). லாரி ஓட்டுநரான இவருக்கும், ஷோபா (35) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஷோபா அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு சமைக்கும் வேலை செய்து வந்துள்ளார். பர்குண்டாவுக்கு கடுமையான மதுப்பழக்கம் இருந்ததால், அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஷோபாவின் நடத்தையில் தேவையற்ற சந்தேகம் எழுப்பி வந்துள்ளார்.

இதனால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று இரவும் பர்குண்டா மது அருந்திவிட்டு வந்து மனைவியின் நடத்தையைக் குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அனைவரும் உறங்கச் சென்ற நிலையில், நள்ளிரவில் ஷோபா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஆத்திரமும் சந்தேகமும் தலைக்கேறிய பர்குண்டா வீட்டில் இருந்த கூர்மையான அரிவாளை எடுத்து வந்து அவரது கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஷோபா, இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அதானி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஷோபாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோட முயன்ற கொடூரக் கணவன் பர்குண்டாவைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.