கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்..

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை நேற்று அறிவித்தார்.. அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் ஏற்கனவே ஒப்பு கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். கடைசியாக ஒரு படத்திற்கு மேல் நடிகர் விஜய் நடிக்கமாட்டார் என்பதால் அவரது ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்ததை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். இதையடுத்து நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள்  ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.