இந்தியாவில் தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை ஓட்டி தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பலரும் அறியாத ஒரு சுவாரசிய தகவல் குறித்து பார்ப்போம். அதாவது ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற முடியாவிட்டாலும் முதலமைச்சர் ஆக முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அது பற்றி விரிவாக பார்ப்போம்.
அதன்படி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(4)-ன் படி, ஒரு மாநிலத்தின் அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ பதவியேற்பவர், அந்த மாநிலச் சட்டமன்றத்தில் உறுப்பினராக (MLA) இல்லை என்றால், அவர் பதவியேற்ற தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
அதன்பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரைத் தங்கள் தலைவராக (முதலமைச்சராக) ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆளுநர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்திய அரசியலில் இதற்குப் பல முக்கிய உதாரணங்கள் உள்ளன. அதாவது மேற்கு வங்கம் (2021): மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் முதலமைச்சராகப் பதவியேற்று, பின்னர் 6 மாதங்களுக்குள் பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
தமிழ்நாடு (2001): ஜெயலலிதா அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருந்தபோதும், அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பதவி விலக நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேல்முறையீட்டு வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 2002 மார்ச் மாதம் மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் முதலமைச்சராகப் பதவியேற்ற போது எம்.எல்.ஏ-க்களாக இருக்கவில்லை. அவர்கள் மேலவை (MLC) வழியாக உறுப்பினராகிப் பதவியைத் தொடர்ந்தனர். மேலும் தோற்றவர் முதலமைச்சராகலாம், ஆனால் அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக மாற வேண்டியது கட்டாயம். அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
