அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்போம் என்று ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் 16வது சீசனின் 9வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் ஈடன் கார்டனில் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ் :

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் குர்பஸ் 57 (44), ஷர்துல் தாக்கூர் 68 (29), ரிங்கு சிங் 46 (33) ஆகியோர் அபாரமாக ஆட, கொல்கத்தா அணி 20 ஓவரில் 204/7 ரன்கள் எடுத்தது. இந்த மூவரைத் தவிர யாரும் இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை. வெங்கடேஷ் ஐயர் 3 (7), நிதிஷ் ராணா 1 (5), ரசல் 0 (1) உள்ளிட்டோர் மோசமாக ஆட்டமிழந்தனர்.

ஆர்சிபி இன்னிங்ஸ் :

இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியில் ஒருவர் கூட 30+ ரன்கள் எடுக்கவில்லை. விராட் கோலி 21 (18), டூ பிளசி 23 (12), பிரேஸ்வெல் 19 (18) ரன் மட்டுமே எடுத்தனர். இறுதி கட்டத்தில் டேவிட் வில்லி 20 (20), ஆகாஷ் தீப் 17 (8) ரன்கள் சேர்த்தனர்.மற்றவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 17.4 ஓவர்கள் முடிவில் 123/10 ரன்கள் மட்டுமே எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

போட்டி முடிந்ததும் ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் பேட்டி அளித்தார். அதில், “பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தாவை 13 ஓவர்களில் 100/5 என்று கட்டுப்படுத்தினோம். ஆனால், அதன் பிறகு  எதிலும் சரியாகச் செயல்படவில்லை. ஷர்துல் தாகூர் புத்திசாலித்தனமாக இருந்தார் மற்றும் அழுத்தம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியின் லெக் ஸ்பின்னர்கள் எங்களுக்கு எதிராக அற்புதமாக பந்து வீசினர். நரேன் மற்றும் வருண் சக்ரவர்த்தியை எதிர்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆடுகளம் பேட்டிங்கிற்கு போதுமானதாக இருந்தது. இழந்தாலும் பரவாயில்லை. ஆனால் குறைந்த பட்சம் 160 ரன்கள் எடுத்து தோற்றிருக்க வேண்டும். இந்தப் போட்டியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம். முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் சிறந்த பந்துவீச்சாளர்கள். அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்போம் ” என்றார்.