சஞ்சு சாம்சன் ஒருநாள் இந்திய கேப்டனாக முடியும் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்..

ஐபிஎல்-2023ல், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் உறுதுணையாக இருக்கிறார். SRH அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு, புதன்கிழமை பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் எடுத்தார். எனவே மீண்டும் சிறப்பான பார்மில் இருக்கும் சாம்சனுக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக உள்ளன.

இந்த பணம் பொழியும் ஐபிஎல் லீக்கில் தூள் கிளப்பி வரும் சாம்சன், தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறமையால் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸை கவர்ந்துள்ளார். கண்டிப்பாக ஒருநாள் இந்திய அணியை சஞ்சு வழிநடத்துவார் என டி வில்லியர்ஸ் நம்புகிறார். இக்கட்டான சூழ்நிலையிலும் சஞ்சு மிகவும் கூலாக இருக்கிறார் என்று ஏபிடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து  முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவானும், ஆர்சிபி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில், “சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வீரர். அவரது கேப்டன்சியும் சிறப்பாக உள்ளது. அவர் களத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட கேப்டன்கள் அரிது. ஒரு தலைவராக அவர் வியூகம் வகுப்பதிலும் முன்னணியில் இருக்கிறார். ஜோஸ் பட்லர் போன்ற உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்ட பிறகு சஞ்சு இன்னும் முன்னேறுவார் என்று நினைக்கிறேன் என்றார்.

மேலும் பட்லர் போன்ற ஒரு கேப்டனும், வீரரும் கிடைத்திருப்பது சஞ்சுவின் அதிர்ஷ்டம். பட்லரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார். வரும் நாட்களில் சாம்சன் கண்டிப்பாக இந்திய அணியை ஏதாவது ஒரு வடிவத்தில் வழிநடத்துவார். இந்திய அணியை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. சஞ்சுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் கிரிக்கெட் உலகையே வென்றுவிடுவார் என கூறியுள்ளார்.

இந்திய அணியில் ஷுப்மன் கில், பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் என வருங்கால நட்சத்திரங்கள் இருந்தாலும், சாம்சன் கேப்டனாக வருவார் என்ற ஏபிடியின் கணிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.