
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில் இந்த உதவி தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்குடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருப்பதால் பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதன் பிறகு வழிகாட்டுதல்களின்படி அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி தங்களின் கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையும், மற்ற அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்களும் டிசம்பர் 31ம் தேதி வரையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 044-29530169 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.