இன்றைய காலத்தில் சிக்ஸ் பேக் மற்றும் ஜீரோ ஃபிகர் பின்னால் உலகம் ஓடிக்கொண்டிருக்க, இத்தியோப்பியாவின் ஓமி பள்ளத்தாக்கில் வாழும் ‘போடி’ (Bodi Tribes) பழங்குடியினரோ முற்றிலும் மாறுபட்ட ஒரு கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். அங்கு ஆண்களின் அழகை அவர்களின் கட்டுமஸ்தான உடலோ அல்லது தசைகளோ தீர்மானிப்பதில்லை; மாறாக, யாருக்கு பெரிய தொப்பை இருக்கிறதோ அவரே அந்த சமூகத்தின் ‘சூப்பர் மாடல்’ மற்றும் அழகானவராகக் கருதப்படுகிறார்.

இதற்காகவே ஆண்டுதோறும் ‘கயல்’ (Kaael) என்ற விசித்திரமான திருவிழா நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் பெரிய தொப்பை கொண்ட வீரரைத் திருமணம் செய்ய அந்த ஊர் பெண்கள் போட்டி போடுகிறார்களாம். இந்தப் போட்டியில் ஜெயிக்க அந்த ஊர் ஆண்கள் ஆறு மாதங்கள் கடுமையாக ‘உழைக்கிறார்கள்’. அதாவது, ஒரு குடிசைக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல், வெறும் உணவும் உறக்கமுமே கதி என்று கிடக்கிறார்கள்.

இவர்கள் தொப்பையை வளர்க்க குடிக்கும் எனர்ஜி டிரிங்க் தான் இதில் ஹைலைட்! பசுவின் பாலில் அதன் ரத்தத்தைக் கலந்து பச்சையாகக் குடிக்கிறார்கள். இதற்காகப் பசுவைக் கொல்லாமல், அதன் நரம்பிலிருந்து ரத்தத்தை எடுத்துவிட்டு மீண்டும் காயத்தை மண்ணால் மூடிவிடுகின்றனர். திருவிழா அன்று உடலில் சாம்பல் மற்றும் மண்ணைப் பூசிக்கொண்டு நடனமாடும் இவர்களில், யாருடைய தொப்பை மற்றவர்களை விடப் பெரியதாகத் தெரிகிறதோ அவரே ‘ஹீரோ’ என அறிவிக்கப்படுகிறார்.