வரலாற்றுச் சிறப்பும் பழம்பெருமையும் கொண்ட கடம்பாடி மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் திருக்கோவில், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காலப்போக்கில் வழிபாடுகள் குறைந்து பூமிக்கடியில் புதைந்துபோன இக்கோவிலை, 2013-ஆம் ஆண்டில் பகுதி மக்கள் மீட்டெடுக்கத் தோண்டியபோது சமயக்குரவர்களின் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டு வழிபாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
கற்றளி அமைப்பில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் ஈசன் ‘திருவதீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் லிங்க வடிவிலும், அம்பாள் ‘மனோன்மணி’ தெற்கு நோக்கித் தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் வெளிக்கோட்டங்களில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களும், வளாகத்தில் விநாயகர், முருகன், அகத்தியர், கால பைரவர் மற்றும் ஐயப்பனுக்கான தனிச் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருக்கல்யாணம், சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம், ஆடிப்பூரம் மற்றும் பிரதோஷங்கள் போன்ற பல உற்சவங்கள் இத்தலத்தில் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. வாழ்க்கையில் தொடர் தோல்விகளைச் சந்திப்பவர்களும், மன அமைதியின்றித் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் மன நிம்மதியும் தொடர் வெற்றிகளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
இத்திருக்கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்குத் தினமும் ஒருகால பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம் – கல்பாக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கத்தில், மாமல்லபுரத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள கடம்பாடி கிராமத்திற்குச் சென்று பக்தர்கள் இத்தல ஈசனையும் அம்பாளையும் தரிசித்து அருள் பெறலாம்.
