சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி.

2024 ஐபிஎல் 18-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. இப்போோட்டியில் சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக பத்திரனாவும், விசா பெறுவதற்காக வங்கதேசம் திரும்பியதால் முஸ்தபிஷூர் ரஹ்மானும் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக மொயின் அலி, மஹீஸ் தீக்சனா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி சென்னை அணியின் துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில் ரவீந்திரா 12 ரன்களிலும், ருதுராஜ்  26 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதையடுத்து ரஹானே மற்றும் சிவம் துபே ஜோடி கைகோர்த்து சிறப்பாக ஆடியது. சிவம் துபே அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 45 ரன்களில் அவுட் ஆகி வெளிறினார்.

அதன்பின் ரஹானே 35 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின் ஜடேஜா* அவர் பங்குக்கு 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். டேரல் மிட்செல் 13 ரன்கள் அடுத்து கடைசி ஓவரின் 3வது பந்தில் அவுட் ஆனார் பின்  உள்ளே தோனி* 2 பந்துகளில் ஒரு ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் பவுண்டரியுடன் முடித்தார் ஜடேஜா. இதனால் 20 முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். இதையடுத்து தீபக் சஹர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில்  நின்ற மொயின் அலி கோட்டை விட்டார். தொடர்ந்து அந்த ஓவரில் கடைசி பந்தை சிக்ஸர்  அடித்தார் ஹெட்.

இதயடுத்து முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் அபிஷேக் ஷர்மா சிக்சர், பவுண்டரி என அடித்து மிரட்டினார். இதனால் அந்த ஓவரில் 27 ரன்கள் சேர்த்தது ஹைதரபாத். பின் தீபக் சஹாரின் மூன்றாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா சிக்சருக்கு முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அபிஷேக் ஷர்மா அதிரடியாக 12 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 37 ரன்கள் எடுத்தார்.. அதனைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட்  மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடி போட்டியை எடுத்துச் சென்றனர்.

பின்னர் ஹெட் 31 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து எய்டன் மார்க்ரம் – சபாஷ் அகமது கைகோர்த்து ஆடிய போது, மார்க்ரம் அரைசதம் அடித்த பின் மொயின் அலியின் ஓவரில் எல்பிடபிள்யூ அவுட் ஆனார். மார்க்ரம் 36 பந்துகளில் (4 பவுண்டரி,1 சிக்ஸ்) 50 ரன்கள் சேர்த்தார். அதன்பின் சபாஷ் அகமது 18 ரன்களில் வெளியேறினார். கடைசியில் ஹென்றிச் கிளாசன் (10 ரன்கள்) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (14 ரன்கள்) இருவரும் ஜோடி சேர்ந்து வெற்றியுடன் முடித்து வைத்தனர். ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.

சென்னை அணி தொடர்ந்து 2வது தோல்வியை தழுவியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் (4 போட்டிகளில் 2 வெற்றி) 5வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத். அதே சமயம் 4 போட்டிகளில் 2 வெற்றியுடன் புள்ளிபட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் நீடிக்கிறது சென்னை அணி.