தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த இறுதி முடிவு தை மாதம் முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சமீபத்தில் பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து மோதல் இருந்தபோதிலும், டிடிவி தினகரன் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் எந்தக் கூட்டணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்க மறுத்த அவர் கூறியதாவது:
“அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வரும் 25-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, கூட்டணி குறித்த கேள்விக்குத் தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு பக்கம் முடிவு எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த ‘தை மாத’ கெடு அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 25-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அவரது நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
