சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றை அதே பகுதியை பியூலா(55) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பியூலா தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று காரின் பின்புறம் மோதியது. இதனால் காரின் பின் பகுதி முழுவதும் நொறுங்கி தோழிகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் பியூலா இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் குளோரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.