வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், மௌலிபஜார் மாவட்டத்தில் இந்து இளைஞர் ஒருவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்குள்ள சிறுபான்மையினரிடையே பெரும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
மௌலிபஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த 28 வயது இளைஞர் ரத்தன் சாஹுக்கார் என்பவர், புதன்கிழமை காலை 10 மணியளவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டபோது, அவரது கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. உடலில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று ரத்தனுடன் பணியாற்றும் சக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரத்தனின் உடல்நிலை மற்றும் அவர் கட்டப்பட்டிருந்த விதம் ஆகியவை வன்முறையை உறுதிப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கொலை குறித்து வங்கதேச போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தேர்தல் தொடர்பான வன்முறையா அல்லது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதுவரை இந்தக் கொலை தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மைமன்சிங் மாவட்டத்தில் சுஷேன் சந்திர சர்க்கார் (62) என்ற இந்து அரிசி வியாபாரி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சுஷேனை கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு, பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
வங்கதேசத் தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து இந்துக்கள் இலக்கு வைக்கப்படுவது, அந்நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
