தேசிய தலைநகரான டெல்லியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு, விநியோகிக்கப்படும் தண்ணீர் வெயிலின் தாக்கத்தால் வழியிலேயே ஆவியாகிவிடுவதே காரணம் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா புதுவிளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால், விநியோகத்திற்காக வரும் தண்ணீர் வழியிலேயே ஆவியாகி (Evaporate) விடுகிறது; இதன் காரணமாகவே நகரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டார். இவரின் இந்த விசித்திரமான ‘அறிவியல்’ விளக்கம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்பொழுது பெரும் விவாதத்தையும் அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது.

முதலமைச்சரின் இந்த கருத்துக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் தங்களது கடுமையான கண்டனங்களையும் கேலிகளையும் பதிவு செய்து வருகின்றனர். வஜிராபாத் தடுப்பணையில் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதே உண்மை நிலை என்று சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினர், அடிப்படை ஆளுமைத் திறனோ அல்லது அறிவியல் புரிதலோ இல்லாமல் முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் சாக்குபோக்கு கூறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், “மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்க்க வழி தேடாமல், இயற்கையின் மீது பழி போடுவது வேடிக்கையாக உள்ளது” என நெட்டிசன்கள் இணையத்தில் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.