இன்ஸ்டாகிராமில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், “மரபணு மாற்றப்பட்ட ஜெர்சி பசுவின் பாலைக் குடிப்பதால் ஏகப்பட்ட நோய்கள் வருகின்றன” என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தத் தவறான தகவலுக்குப் பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், “ஜெர்சி என்பது மரபணு மாற்றப்பட்ட (GMO) மாடு அல்ல, அது ஒரு கிராஸ் பிரீட் (Cross-breed) இன மாடு மட்டுமே” என்று அறிவியல் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். பால் தரம் குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர் முன்வைத்துள்ள இந்த விளக்கம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

​மேலும், அந்த இளைஞரைச் சாடிய மனோ தங்கராஜ், “எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு முன்னால் தயவுசெய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அடிப்படை விவரங்கள் தெரியவில்லை என்றால் என்னிடமே கேளுங்கள், நான் உங்களுக்கு இலவசமாகவே பாடமெடுக்கத் தயார்!” என்று காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இது போன்ற போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.