தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை பகுதியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நள்ளிரவில் சின்னதுரையின் என்பவரின் வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கஞ்சா புகைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
போதையில் அந்த இளைஞர்கள் சின்னதுரையின் வீட்டின் கதவை தட்டியதால், அவரது மகன்கள் மாரிபாண்டியன் மற்றும் பார்வை மாற்றுத்திறனுடைய அருள்ராஜ் ஆகியோர் அவர்களை கண்டித்தனர். இந்தச் சம்பவத்திற்கு பின்னர், அந்த இரண்டு சகோதரர்களும் மாயமாகி இருந்தனர்.
அவர்களை பற்றிய தகவலின்றி சோகத்தில் இருந்த குடும்பத்தினர், ஜூலை 30-ம் தேதி, வ.உ.சி. துறைமுக சாலையில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உள்ள உப்பாற்று ஓடையில், இருவர் உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சென்று உடல்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவரான ரிதன் (25) என்பவர், மாரிபாண்டியனின் உறவினர். அவரது சகோதரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாக, அதற்குப் பின் ஏற்பட்ட மனவேதனையால், அதற்கான காரணமாக மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோரை குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, ரிதன், முனீஸ்வரன், முகமது மீரான், சங்கர் மற்றும் ஒரு இளஞர் உள்ளிட்டோர் சேர்ந்து, ஜூலை 28 அன்று இருவரையும் கம்பு, கல்லால் தாக்கி, உப்பாற்று ஓடையில் கொலை செய்து புதைத்தனர் என்பது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலைச் சம்பவத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா?, திட்டமிடலில் வேறு யாரும் இருந்தார்களா? எனும் கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டைக் கொலை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
