நிவாரண பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படை மேற்கொள்ளவும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.12.2023 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை புது டெல்லியில் சந்தித்து தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி, இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தார்.

புது டெல்லியில் இருந்து நேற்று (20.12 2023) காலை சென்னை திரும்பிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் மீட்புப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படுவது குறித்தும், வெள்ளம் சூழ்ந்து சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, அதிகனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இன்று (21.12.2023) காலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி சென்றடைந்தார். தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து வெள்ள சேத விவரங்களையும், அவர்களுக்கு கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

டிசம்பர் 17-ஆம் தேதி அதிகன மழை பெய்ய தொடங்கியவுடன் 18ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையன்ட் நகர், அண்ணா நகர், டீச்சர்ஸ் காலனி ராஜீவ் நகர், சீலோன் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் சுமார் 600 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேலை உணவும், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நிவாரண மையத்தில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு தேவை செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து எட்டையாபுரம் 3-வது கேட் மேம்பாலத்தில் இருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் குறிஞ்சி நகர் போல் பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்து சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என் நேரு, சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு என். பி. ஜெகன், வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் ,வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளர் திருமதி. ஜோதி நிர்மலா சாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் ஜி. லட்சுமிபதி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.