தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையின் காரணமாக ஒரு பக்கம் தூத்துக்குடி மாவட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் 62 வயது முதியவர் ஒருவர் முழங்கால் அளவு வெள்ள நீரில் விடாமல் ஜாக்கிங் செய்து கொண்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் சுவாரசியமான சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சில நாட்களாக வீடியோவாக பரவி வருகிறது.

தூத்துக்குடியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கழுத்தளவு பாய்ந்து செல்லும் காட்டாற்று வெள்ளத்தில் அசால்டாக நீச்சல் அடித்து மொட்டை மாடிக்கு தாவியது, இளைஞர்கள் வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்று டீக்கடையில் டீ வாங்கி குடிப்பது போன்ற வீடியோக்கள் உலாவி வருகிறது . அந்த வகையில் தற்போது தூத்துக்குடி சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் முழங்கால் அளவு வெள்ள நீரில் தினமும் ஜாக்கிங்க் செய்யும் வீடியோ வெளியாகி வருகிறது.

அவர் ஜாக்கிங்க் செல்வதை மழை வெள்ளமும் தடுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம் என்று அவர் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், தண்ணீரில் தினமும் ஓடுவது நல்ல புத்துணர்ச்சியாக இருக்கிறது. மழைக்காலங்களில் எல்லோரும் சோம்பல் ஆகி போகாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.