உலக நாடுகள் பல, இயற்கையிலேயே இயங்கும் உயிரினங்களை நவீன கருவிகள் மூலம் கட்டுப்படுத்தி மனிதனுக்கு தேவையான பணிகளை செய்விக்க வாய்ப்பு உள்ளதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வகையில், ‘சைபோர்க்’ (Cyborg) தொழில்நுட்பம் – உயிரினம் + கருவி சேர்க்கையை கொண்டு உருவாகும் அறிவியல் சோதனை – பல நாடுகளில் பரவலாகப் பயிற்சி பெறுகிறது. தற்போது சீனாவின் பீஜிங் தொழில்நுட்ப மையம் இதில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சீன விஞ்ஞானிகள் தேனீக்களின் மூளையை கட்டுப்படுத்தும் சிறிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். 74 மில்லிகிராம் எடை கொண்ட இந்த சாதனத்தில் நுண் ஊசிகள் உள்ளன. அவை தேனீயின் நரம்புக் கட்டமைப்பை தூண்டி, அதன் பயணத்தைத் துல்லியமாக நிர்ணயிக்கின்றன. எங்கே போக வேண்டும், எங்கு பறக்க வேண்டும், எந்த திசை நோக்கி நகர வேண்டும் என்பதைக் கூட மனித உத்தரவுகளுக்கு ஏற்ப தேனீ இயக்கப்படும் நிலையில் உள்ளது.
90 சதவீதம் வரை தேனீக்கள் உத்தரவை பின்பற்றுகின்றன என்று தற்போது வரை நடந்த ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த தேனீக்கள், எதிர்காலத்தில்:
பேரிடர் நேரங்களில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று நிலவரம் தெரிந்து கொள்ள
பயங்கரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உண்மையை கண்காணிக்க
மரபணு ஆய்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் ராணுவ உளவுப் பணிகளில் பெரிதும் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது முதல்முறையல்ல. ஏற்கனவே சிங்கப்பூரில் இதற்கான சோதனைகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய கருவி, முந்தைய கருவிகளை விட மூன்றில் ஒரு பங்கு எடையுடன், அதைவிட அதிக செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த கருவி மின்சாரம் இல்லாமல் செயல்பட முடியாது என்பதால், பேட்டரி இணைப்பதற்கான சவால்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அதற்காக புதிய தொழில்நுட்பங்கள் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட தேனீக்கள் உளவுத் தேடல் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
