உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம், கலான் பகுதியைச் சேர்ந்த ஜமுனா தேவி (45) என்ற பெண், தனது வீட்டின் இரண்டாவது மாடி மொட்டை மாடியில் துணிகளை எடுக்கச் சென்றபோது, திடீரென ஒரு குரங்கு கூட்டம் அவரைச் சூழ்ந்தது. இதனால் அச்சமடைந்த அவர் கீழே இறங்க முயன்றபோது, குரங்குகள் ஆக்ரோஷமாகத் தாக்கின.

இதில் நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவத்தால் அவரது நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் நிலைகுலைந்து போயுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே இத்தகைய தொடர் மரணங்களுக்குக்காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மட்டும் 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தும், உள்ளூர் நிர்வாகமும் வனத்துறையும் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரு ஒன்றரை வயதுக் குழந்தையும், 11 வயதுச் சிறுவனும் குரங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இனியாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.