கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. 4-ஆம் வார்டு கிளைச் செயலாளர் சபரி ராஜன் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் கீழ்தளத்தில் அவர் வசித்து வர, மேல்தளத்தில் அவரது மகள் தனியாக வசித்து வருகிறார்.

இருவருக்கும் தனித்தனி மின் இணைப்புகள் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தினர் அதை ஒரே இணைப்பாக மாற்றியுள்ளனர். இதனால் வழக்கமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வந்த மின் கட்டணம், இம்முறை திடீரென ரூ.8,000 ஆக உயர்ந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சபரி ராஜன், ஆன்லைன் வழியாக இரு மின் இணைப்புகளாக மாற்றக் கோரியும், அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்ததாக தெரிவித்தார். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று காலை சபரி ராஜன் தனது மனைவியுடன் கோவில்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மின் அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, “கட்டணம் கட்டியே ஆக வேண்டும், எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறியதாக தகவல். இதனால் ஆவேசமடைந்த சபரி ராஜன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.

உடனே போலீசார் தலையிட்டு மண்ணெண்ணெய் கேனை பறித்து, தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். பின்னர் சபரி ராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது