ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த போனலு திருவிழா கொண்டாட்டத்திற்காக சமைக்கப்பட்ட கோழி மற்றும் ஆட்டுக்குடல் உள்ளிட்ட மாமிச உணவுகளை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்டது, ஒரு குடும்பத்தில் பெரும் விஷத்தொற்றை ஏற்படுத்தி, அதில் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது விளக்கத்தின் பேரில், அந்த குடும்பத்தினர் 9 பேரும் திருவிழாவில் சமைக்கப்பட்ட மாமிச உணவை மறுநாள் எடுத்துச் சாப்பிட்டனர்.

உணவு போதிய முறையில் சேமிக்கப்படாததால், அதில் பாக்டீரியா பெருகி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, உணவால் ஏற்படும் கடும் தொற்றுக்கு அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 வயதான குடும்பத் தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த குடும்பத்தில் உள்ள மூன்று பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்கள். இந்த சம்பவம் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. மாமிசம் உள்ளிட்ட உணவுகளை உரிய வெப்பநிலையில் சேமிக்காவிட்டால், பாக்டீரியா பெருகி ஆபத்தான நிலைக்கு செல்லும் என்பதையும், குறிப்பாக பண்டிகை உணவுகளை மறுநாள் சாப்பிடும் பழக்கத்தில் இருந்து மக்கள் விலக வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.