கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தில் முருகேசன்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்த குமாருக்கும் மேட்டுப்பாவி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் செட்டி பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்ல முடிவெடுத்தனர்.

அதன்படி அலங்கரிக்கப்பட்ட மட்டு வண்டியில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்ட, பக்கத்தில் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான ஆனந்தகுமார் கூறியதாவது, பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்துள்ளார். எங்களது குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. விவசாயம் என்பது உணர்வுடன் ஒருங்கிணைந்தது. எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் நாங்கள் மாட்டுவண்டியை தேர்வு செய்தோம்.

விவசாயம் இல்லை என்றால் வாழ முடியாது. எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறை தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி விவசாயத்தை ஊக்குவித்தால் நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும் என கூறினார்.