உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள பச்சாய்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மருமகன் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் குப்தா என்ற அந்த நபர், கடந்த 2022-ஆம் ஆண்டு பிரீத்தி என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
மேலும் ஆரம்பத்தில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரீத்தியின் குடும்பத்தினர், பின்னர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த அமித் சனிக்கிழமை இரவு ரகசியமாகத் தனது மாமனார் வீட்டுக்குள் நுழைந்து இந்தத் துயரச் செயலை அரங்கேற்றியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது அமித் தனது மனைவி பிரீத்தி மற்றும் மாமியார் சுஷிலா தேவி ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தடுக்க வந்த மாமனார் அந்து குப்தாவையும் அவர் பலத்த காயப்படுத்திய நிலையில், தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாரணாசியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் கொலையாளியின் மைத்துனி கீர்த்தி இச்சம்பவம் குறித்து விவரிக்கையில், அமித் சத்தம் கேட்காமல் இருக்கத் தனது காலணிகளை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வந்ததாகவும், குழந்தையைப் பறிக்க முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அனைவரையும் தாக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். தப்பியோடிய அமித் குப்தாவைப் பிடிக்க காவல்துறை மூன்று தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
