உத்தரப் பிரதேசம், தியோரியா பகுதியில் திருமண நாளானது வாழ்க்கையின் மறக்க முடியாத இனிய தருணமாக இருக்க வேண்டிய நிலையில், இங்கு நிகழ்ந்த சம்பவம் மணமகன் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருமணம் நடைபெற்ற 20 நிமிடங்களில் மணமகள் திடீரென “இந்த வீட்டில் தங்க விருப்பம் இல்லை” என்று அறிவித்ததால், இரு குடும்பங்களும் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தனர்.
அதாவது, மணமகன் விஷால் மாதேசியா மற்றும் மணமகள் பூஜா ஆகியோரின் திருமணம் நவம்பர் 25ஆம் தேதி நடந்து, அந்த இரவிலேயே அனைத்து சடங்குகளும் நிறைவடைந்தன. திருமணத்துக்கு பின், பூஜா மரபுப்படி மணமகன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆனால் வீட்டுக்கு வந்த 20 நிமிடங்களுக்குள், பூஜா திடீரென தனது அறையிலிருந்து வெளியில் வந்து, அனைவரின் முன்னிலும் “என் பெற்றோரை அழையுங்கள்… நான் இங்கே தங்க மாட்டேன்” என்று கூறிவிட்டார். முதலில் இது ஒரு நகைச்சுவை அல்லது சங்கடம் என்று நினைத்த உறவினர்கள், பின்னர் அவள் தொடர்ந்தும் அதே வாக்கியத்தை பலமுறை கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
பூஜா திடீர் முடிவுக்கு காரணம் வெளிப்படுத்த மறுத்ததால், விஷாலின் குடும்பத்தினர் அவளுடைய பெற்றோரிடம் தகவல் கொடுத்தனர். இரு தரப்பினரும் அவளை சமாதானப்படுத்த முயன்றாலும், பூஜா தனது முடிவை மாற்ற மறுத்தார்.
இதையடுத்து கிராமத்திலேயே பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்பட்டது. இரு குடும்பங்களும், கிராமத்தார் பலரும் கலந்து கொண்டு ஐந்து மணி நேரம் விவகாரத்தை விவாதித்தனர். இறுதியில், இரு குடும்பங்களின் பரஸ்பர ஒப்புதலின் பேரில் திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமணத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து பரிசுகளும் திருப்பித் தரப்பட்டன. பின்னர் பூஜா தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பினார்.
மேலும் திருமணத்திற்கு முன்பே பூஜா மனதில் தயக்கம் இருந்ததாகவும், திருமணத்தை விரும்பவில்லை என்று சாதாரணமாகத் தெரிவித்திருந்ததாகவும் மணமகன் விஷால் தெரிவித்துள்ளார். “அவள் தங்க மறுத்தது இரு குடும்பங்களுக்கும் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது” என்றார் அவர்.
