
தமிழகத்தில் சென்னை என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை, மின்சார ரயில் சேவை போன்ற போக்குவரத்து பயன்பாடுகள் இருந்த நிலையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்ல பைபாஸ் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குறிப்பாக தமிழக அரசு கடந்த 2017 ம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் ஓஎம்ஆர் சாலையில் இருந்து கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக பைபாஸ் சாலைகள் அமைக்க ஏற்பாடு செய்தது. இதற்காக ரூ 247 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இதற்கான பணிகளை தமிழக சாலை மேம்பாட்டு கழகம் தொடங்கியது. இந்த சாலையை 7.45 கிலோமீட்டர் தொலைவில் அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணி தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த பணி 98 சதவீதம் நிறைவடைந்த நிலையில் உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் பைபாஸ் சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் கூடிய விரைவில் இந்த பணி நிறைவடையும் என கூறப்படுகிறது.