தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும், அதுகுறித்த அறிவிப்பைத் தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களைச் சேர்க்க தவெக சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் போன்ற விவகாரங்களில் சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவும், மக்கள் அவர்களைச் சரியாக அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குப்பைப் பிரச்சினைகளை அருண்ராஜ் நேரில் பார்வையிட்டார். மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாகச் செய்யப்படாததால், நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
குப்பைகளைச் சுத்திகரிக்காமல் பாறைக்குழிகளில் கொட்டுவதால் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
