உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பிரசாதமான லட்டு தயாரிப்பில் கலப்படம் நடந்திருப்பது குறித்து சி.பி.ஐ. தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில், 42 சதவீதம் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 48.76 கோடி லட்டுகளில், கிட்டத்தட்ட 20.14 கோடிக்கும் அதிகமான லட்டுகள், இயற்கையான பால் சார்ந்த கொழுப்புக்குப் பதிலாக, செயற்கையான மற்றும் ரசாயனங்கள் கலந்த நெய்யைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளில் ₹.534.7 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 1.61 கோடி கிலோ நெய்யில், 68 லட்சம் கிலோ (ரூ.250 கோடி மதிப்புள்ள) சரக்குகள் கலப்படமானவை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலப்பட நெய்யை வழங்கிய நிறுவனங்களாக, உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டைரி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆய்வில், இந்த நெய், பால் அல்லது வெண்ணெயில் இருந்து பெறப்படவில்லை என்பதும், மாறாக பாமாயில் மற்றும் பாம்கர்னல் ஆயிலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெய்யின் இயல்பான அமைப்பை ஒத்திருக்குமாறு செய்யச் செயற்கைச் சுவைகள், மோனோ மற்றும் டிகிளிசரைடுகள் போன்ற குழம்பாக்கிகள் மற்றும் வண்ணம் சேர்க்கப்பட்டுத் தரமாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கலப்பட நெய், பொதுவான இருப்புடன் கலக்கப்பட்டதால், 10.97 கோடி பக்தர்களில் யாருக்குத் தூய லட்டு கிடைத்தது, யாருக்குக் கலப்பட லட்டு கிடைத்தது என்று இப்போது பிரிக்க முடியாது எனத் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு புள்ளிவிவரங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.