திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து போகும் நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக வழக்கத்தை விட கடந்த ஒரு வாரமாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணி அளவில் விமான நிலைய அதிகாரியின் அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலையத்தில் வெடி குண்டு உள்ளதாக மர்ம நபர் ஒருவர் கூறினார்.

அதன்பின் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. அத்துடன் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.