சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், தியேட்டர்களில் படம் எப்படி ஓடுகிறது என்பதை நேரில் பார்ப்பதற்கான டூரை ஆர்.ஜே. பாலாஜி தொடங்கியுள்ளார்.
இதன் ஒருபகுதியாகத் திருப்பூரில் உள்ள தியேட்டருக்குச் சென்ற அவர், குடும்பங்கள் அனைவரும் வந்து தியேட்டரை ஒரு திருவிழா போலக் கொண்டாடிப் படத்தைப் பார்த்து வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, கருப்பசாமி என்பது சாதி மத எல்லைகள் இல்லாத நம் ஊரின் எல்லைத் தெய்வம் என்பதால், மக்கள் அனைவரும் இதனைத் தங்களுடைய சொந்தச் சாமியாக நினைத்துப் படத்தைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆன்லைனில் விமர்சனம் செய்பவர்களுக்காக இல்லாமல், முழுக்க முழுக்கப் பொதுமக்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் மட்டுமே இந்தப் படத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
சிலர் தியேட்டரில் சாமி ஆடுவதற்காகப் படக்குழுவினரே ஆட்களை அனுப்பியதாகப் பொய் வதந்திகளைப் பரப்புவதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தங்களின் சொந்தப் படமாக நினைத்துக் கொண்டாடும் இந்த மாயாஜாலமே படத்திற்குச் கிடைத்த உண்மையான வெற்றி என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
