அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஜெயலலிதாவின் நெருங்கியவராகக் கருதப்பட்ட செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியது, அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி நேற்று செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செங்கோட்டையன் அனைத்து தொண்டர்களாலும் மதிக்கப்படும் தலைவராக உள்ளார். எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைப்பு வேண்டாம் என்று சொல்லாமல், யாரையும் ஏற்கமாட்டேன் என்ற மனப்போக்குடன் செயல்படுகிறார். நீக்கப்பட வேண்டியவர் தலைவராக இருக்கிறார்” எனக் கடுமையாக சாடினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து சுற்றுப்பயணங்களிலும் செங்கோட்டையன் இருந்தவர். அப்படி ஒரு அனுபவமுள்ளவரை நீக்கியுள்ள பழனிசாமி, தான்தோன்றி பொதுச்செயலாளராகத் திகழ்கிறார். ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானித்த கட்சியில், இப்போது நான் பொதுச்செயலாளர் என்று கூறுவது எந்த அளவுக்கு நியாயம்? சேலம் மாவட்டத்தில் செங்கோட்டையன் நடந்தால் பின்னால் ஓடிய பழனிசாமி, இன்று பணம் பதவியால் மாறி விட்டார்” என்று கூறினார்.
புகழேந்தி மேலும், “சின்னம்மா கையில் பதவி பெற்றவரான பழனிசாமி, தற்போதைய நிலை தொடர்ந்தால் விரைவில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படுவார். 2026ம் ஆண்டுக்கான தேர்தலில் திமுக மற்றும் தவெக தான் முக்கிய போட்டியில் ஈடுபடுவார்கள். பழனிசாமி சீமான் உடன் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்படுவார்” என்று எச்சரித்தார். இதன் மூலம், அதிமுகவின் எதிர்காலம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல், கொடநாடு கொலை வழக்கில் திமுக அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காததை புகழேந்தி கடுமையாக சாடினார். “திமுகவுக்கு தோல்வி ஏற்படாது என்பதற்காக பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. ஆனால், நீதிமன்றம் விரைவில் உண்மையான அதிமுக எங்கு இருக்கிறது என்பதைக் கூறும். செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இருக்கும் இடமே அதிமுகவின் உண்மையான தளம் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தும்” என அவர் வலியுறுத்தினார்.
