பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிஷிவந்தியம் தொகுதியில் பாமகவுக்கு வாக்களித்த மக்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தோல்வி பயத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதா? கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி கொனகள்ளவாடி கிராமத்தில் உள்ள 308, 309 ஆகிய வாக்குச்சாவடிகளில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் மீது திமுக குண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல், பாசார் கிராமத்தில் 161-ஆம் எண் வாக்குச்சாவடியில் அதிமுக கிளைச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜனநாயகத் திருவிழாவின் போது திமுகவினர் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலாகவே அதிமுக – பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாயின. அதே நிலை தான் ரிஷிவந்தியம் தொகுதியிலும் எதிரொலித்தது. ஆனால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத திமுக வேட்பாளரும், கள்ளச்சாராய வணிகத்தின் காட்பாதருமான வசந்தம் கார்த்திகேயனின் ஆட்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் பாமகவுக்கு வாக்களித்த மக்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்: தோல்வி பயத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி கொனகள்ளவாடி கிராமத்தில் உள்ள 308, 309 ஆகிய வாக்குச்சாவடிகளில் மாம்பழம் சின்னத்திற்கு…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 23, 2026
பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுப்போடக் கூடாது என்று மிரட்டியும், தாக்கியும் உள்ளனர். தோல்வியாளர்களின் கடைசி ஆயுதம் வன்முறை தான் என்பார்கள். அதைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர் கடைசி நேரத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதை அனுமதிக்க முடியாது. ஐந்தாண்டுகளாக திமுகவினர் செய்த வன்முறைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அக்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதன்பிறகும் திருந்த மறுக்கும் திமுகவினரை மன்னிக்க முடியாது. ரிஷிவந்தியம் தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீதும், அவர்களை ஏவிய திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
