தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளைப் பெற பிடிவாதம் காட்டி வருகிறது. ஆரம்பத்தில் 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களைக் கோரிய காங்கிரஸிடம், தி.மு.க. தரப்பு 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்தது.

இந்த இழுபறியைத் தீர்க்க ப.சிதம்பரம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், 28 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களை வழங்க தி.மு.க. சம்மதித்துள்ளதாகவும், இதற்கு இன்று இரவுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி இந்த நிபந்தனையை ஏற்குமா அல்லது தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்றுப் பாதையைத் தேடுமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அவருக்குப் பதிலாக மாணிக்கம் தாகூர், விஸ்வநாதன், செல்லகுமார் அல்லது விஷ்ணு பிரசாத் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.