2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக, காங்கிரஸ் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 170-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
புதிதாக இணைந்தவர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்குச் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகத் தொண்டர்கள் அனைவரும் ‘பம்பரம்’ போலச் சுழன்று களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாற்றுக்கட்சியினர் இவ்வாறு மொத்தமாக அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
