2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்ற கட்சிகளில் உள்ள முக்கியப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், நேற்றிரவு பிரபல வழக்கறிஞர் சத்யகுமார், விஜய் முன்னிலையில் தன்னைத் தவெகவில் இணைத்துக்கொண்டார். ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகரனின் மகன் அமலன், பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் மற்றும் அரசியல் விமர்சகர் அனந்தஜித் ஆகியோர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில், சத்யகுமாரின் வருகை கட்சிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட முகங்கள் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது கட்சியின் பலத்தைப் பெருக்கும் வகையில் விஜய் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நகர்வுகள், மற்ற பெரிய கட்சிகளுக்கும் ஒரு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உறுப்பினர்களின் வருகை தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.