விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தி.மு.க-வைத் தீயசக்தி என்று விஜய் விமர்சித்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யின் இந்தப் பேச்சு சுயமாகச் சிந்தித்துப் பேசுவது போலத் தெரியவில்லை என்றும், இது யாரோ ஒருவரால் தூண்டப்பட்ட பேச்சாகவே தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் எதற்காகக் கட்சி தொடங்கினார், அவருடைய கொள்கைகள் என்ன என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அவருடைய பேச்சுகள் அனைத்தும் வெறும் தி.மு.க வெறுப்பாகவே இருப்பது வருத்தமளிப்பதாகத் திருமாவளவன் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் விஜய் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான விமர்சனங்களை மக்கள் எந்த அளவிற்கு ஏற்பார்கள் என்பது கேள்விக்குறிதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
