வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அறிக்கை பாஜகவை ஒட்டி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகின்றார். அதிமுக மக்களையும் தொண்டர்களையும் நம்பி உள்ள கட்சி. நாங்கள் யாரையும் தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களைத் தேடி எல்லோரும் வருவார்கள். திமுக கூட்டணி கட்சிகளை தான் நம்பியுள்ளது. சந்தர்ப்பவாத அரசியல் செய்து கொண்டிருப்பது திமுக தான். தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களின் கதறல் ஸ்டாலின் செவிக்கு கேட்கவில்லையா? கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 17 போக்சோ வடக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது தமிழக வந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டினார். தற்போது மத்திய அமைச்சரை அழைத்து வந்து கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துகின்றார். இப்படி இரட்டை வேடம் போடுவது தான் ஸ்டாலின் வழக்கம். அதிமுக கூட்டணி வேறு கொள்கை வேறு என இருக்கக்கூடிய கட்சி. ஆனால் திமுக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுப்பார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய காலம் வந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.