அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி என்றும், அதிமுக உடைவதற்கு திமுக காரணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
திமுக எப்போதுமே ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், வெற்றி வரும்போது ஆடாமலும், தோல்வி வரும்போது வாடாமலும் நிலையாக இருக்கும் கட்சி திமுக தான் என பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், சி.வி.சண்முகத்தின் பதவி ஆசை குறித்து விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி, அதிமுக எம்.எல்.ஏ-க்களை விஜய் தனது கட்சியில் சேர்த்துக் கொள்வாரா? என்ற கேள்வியையும் எழுப்பினார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கட்சி மாறுவது போன்ற விஷயங்கள் தற்போது நடந்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
எந்தச் சூழல் வந்தாலும் திமுக தனது முடிவில் உறுதியாக இருக்கும் என்றும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று பேசும் விஜய், அதிமுகவினரை ஏற்பாரா என்பதை அவரிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் காரசாரமாகப் பதிலளித்தார்.
