தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக ராஜாஜி பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து காமராஜர் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்து கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
பின்னர் அண்ணாதுரை தலைமையில் 1967-இல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தது. அவரைத் தொடர்ந்து மு.க. கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் பலமுறை முதலமைச்சர்களாகப் பதவி வகித்து தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தினர்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் குறுகிய காலம் பதவி வகிக்க, பின்னர் ஜெயலலிதா தமிழகத்தின் செல்வாக்குமிக்க பெண் முதலமைச்சராக உயர்ந்தார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்தனர்.
இவர்களுக்கு இடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் முதலமைச்சர் பொறுப்பை வகித்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது. அவர் 2026 மே மாதம் வரை தனது ஐந்தாண்டு காலப் பதவியை நிறைவு செய்தார்.
தற்போது நடைபெற்று முடிந்த 2026 சட்டசபை தேர்தலில், 108 இடங்களைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 1952-இல் தொடங்கிய தமிழக முதலமைச்சர்களின் பட்டியலில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகும் மற்றுமொரு முக்கியத் தலைவராக விஜய் இணைந்துள்ளார்.
