நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ரீதியாகப் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் எம்பி (Karthi Chidambaram) இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி எந்தவித துரோகமும் செய்யவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள அவர், தேர்தல் என்று வரும்போது திமுகவுக்குத் தங்களின் வாக்குகளும், காங்கிரஸுக்குத் திமுகவின் வாக்குகளும் பரஸ்பரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “ஒருவேளை காங்கிரஸ் கட்சி திமுகவுடனேயே நீடித்திருந்தாலும் கூட, அவர்களால் இந்தத் தேர்தலில் ஆட்சி அமைத்திருக்க முடியாது” என்று கார்த்தி சிதம்பரம் ஓப்பனாகப் பேசியுள்ளது அறிவாலயத் தரப்பைப் பயங்கர அதிர வைத்துள்ளது.

​அதே சமயம், தற்போதையச் சூழலில் திமுகவை விமர்சிக்கத் தான் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் (Lok Sabha Elections) திமுக கூட்டணியின் வாக்குகளால் மட்டுமே தான் வெற்றி பெற்றேன் என்ற உண்மையை நன்றியோடு நினைவுகூர்ந்த அவர், தேர்தல் தோல்விகளுக்குக் காங்கிரஸைக் குற்றம் சொல்வதில் நியாயமில்லை என்பதைச் சூசகமாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் – திமுக கூட்டணிக்குள் இருக்கும் இந்த மறைமுக வார்த்தைப் போர், தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.