மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டம் மொஹாடி பகுதியில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் கொடுமை தாங்க முடியாமல், பெற்ற தாயும் தந்தையும் சகோதரனும் சேர்ந்து அவரைக் தூக்கிலிட்டுப் படுகொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை போல நாடகமாடிய திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெற்ற வயிரையே எரிய வைக்கும் வகையில், தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரை அடித்துத் துன்புறுத்துவதையும், வீட்டில் அராஜகம் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த அந்த மகனின் செயலால் எல்லைக்கட்டற்ற மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர், வேறு வழியின்றி இந்த விபரீத முடிவை கையில் எடுத்துள்ளனர்.

இரத்த பந்தமாக இருந்தாலும், தினமும் அனுபவித்த நரக வேதனையே பெற்ற பெற்றோரையே கொலையாளிகளாக மாற்றியிருக்கிறது என்ற செய்தி அப்பகுதியையே உரைய வைத்துள்ளது. சம்பவம் நடந்த அன்று, வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகன், குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வம்புக்கு இழுத்துள்ளார்.

இதனால் பொறுமையின் எல்லையைத் தாண்டிய பெற்ற தாயும் தந்தையும், உடன்பிறந்த சகோதரனும் இணைந்து அவரை அடித்து, தூக்கில் தொங்கவிட்டுப் படுகொலை செய்துள்ளனர். பின்னர், இந்த கொடூரக் கொலையை மறைப்பதற்காக, அவர் தானாகவே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஊராரையும் காவல்துறையையும் நம்ப வைக்க நாடகமாடியுள்ளனர்.

ஆனால், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்த காவல்துறையினருக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தற்கொலை நாடகம் அப்பட்டமாக அம்பலமாகி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அதோடு சாராய போதையும், அதனால் ஏற்படும் குடும்ப வன்முறையும் எத்தகைய நரகத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாகும். பெற்ற மகனைக் கொன்றுவிட்டுச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் பெற்றோரையும், மதுப் பழக்கத்தால் உயிரை விட்ட மகனையும் எண்ணி கிராம மக்கள் கண்ணீருடன் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் காவல்துறையினர் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மது என்ற அரக்கன் ஒரு குடும்பத்தையே ஒரே அடியில் எப்படிக் கூண்டோடு அழித்துவிடும் என்பதை உணர்த்தும் இந்த நெஞ்சைப் பிளக்கும் சம்பவம், சோசியல் மீடியாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.