கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குப் பணிபுரியும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

இவர்களுக்காக லாலிக்கல் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி விடுதியில், கடந்த 4ஆம் தேதி குளியல் அறை ஒன்றில் ரகசிய கேமரா கண்டறியப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய உத்தனப்பள்ளி போலீஸார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி (வயது 22) என்பவரைக் கைது செய்தனர்.

ஆரம்பத்தில் நீலுகுமாரி, தனது காதலன் சந்தோஷ்தான் ரகசிய கேமராவைக் கொடுத்து குளியல் அறையில் வைக்கச் சொன்னதாகவும், கேமரா மற்றும் டிவைஸ்களை பை மற்றும் ஷூவில் மறைத்து எடுத்து வந்ததாகவும் கூறி போலீஸாரை திசை திருப்ப முயன்றார்.

இதையடுத்து சந்தோஷைத் தேடிப் போலீஸார் பெங்களூரு விரைந்தனர். ஆனால், நீலுகுமாரியிடம் நடத்திய தீவிர விசாரணையில், சந்தோஷ் என்பவர் அவரது காதலரே இல்லை என்றும், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ரவி பிரதாப் சிங் (29) என்பவரே உண்மையான காதலர் என்றும் தெரிய வந்தது. காதலனைத் தப்ப வைக்க நீலுகுமாரி நாடகமாடியதும் அம்பலமானது.

இதையடுத்து, டெல்லியில் பதுங்கி இருந்த முக்கியக் குற்றவாளியான ரவிபிரதாப் சிங்கை போலீஸார் கடந்த 6ஆம் தேதி இரவு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரியும், ரவிபிரதாப் சிங்கும் 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த நீலுகுமாரி, தனது சம்பளத்தின் ஒரு பகுதியை ரவிபிரதாப் சிங்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு “நான் சொந்தமாக கார் வாங்க வேண்டும். உன்னை காரில் ராணி போலப் பார்க்க வேண்டும். அதற்குப் பணம் தேவை” என்று ரவிபிரதாப் சிங் நீலுகுமாரியிடம் “நீலி கண்ணீர்” வடித்ததாகத் தெரிகிறது. அதற்குப் பணம் தர என்ன செய்ய வேண்டும் என்று காதலி கேட்க, ரவிபிரதாப் சிங் ஒரு ஐடியாவை வகுத்துக் கொடுத்துள்ளார்.

அதன்படி, பெங்களூருவுக்கு வரவழைத்து ரகசிய கேமராவைக் கொடுத்த அவர், “இந்தக் கேமராவை உனது அறையில் வை. உனது அறையில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணை எனக்கு அனுப்பு. நான் அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறேன். அதில் வரும் பணத்தில் கார் வாங்கி ஜாலியாக வாழலாம்” என்று கூறி உள்ளார்.

தனது காதலன் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீலுகுமாரி கேமராவை வைத்ததும், பிரச்சினை வெளியானவுடன் காதலனைத் தப்ப வைக்க தன்னிடம் பேசிக்கொண்டிருந்த சந்தோஷை மாட்டிவிடத் திட்டம் போட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

நீலுகுமாரி சிக்கிய தகவல் தெரிந்ததும் ரவிபிரதாப் சிங் முதலில் பெங்களூருவில் இருந்து பஞ்சாப்புக்குத் தப்பிச் சென்றார். பின்னர் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியில் பதுங்கியிருந்தபோது போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைதான ரவிபிரதாப் சிங் வேறு எங்கும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.